வங்கதேசத்தில் இந்துக்களின் வீடுகள், கடைகள் மீது பயங்கரத் தாக்குதல்: 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு!

 
வங்கதேசம் வங்கதேசத்தில் வன்முறை இந்துக்கள் வங்கதேசம் வங்கதேசத்தில் வன்முறை இந்துக்கள்

அண்டை நாடான வங்கதேசத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, சிறுபான்மையின இந்து மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் மீது கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் உள்ள ரங்பூர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள தச்பாரா (Dashpara) சந்தைப் பகுதியில் இன்று அதிகாலை வேளையில் புகுந்த ஒரு கும்பல், அங்கு வசிக்கும் இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கித் தாக்குதல் நடத்தியது.

வங்கதேசம்

அப்பகுதியைச் சேர்ந்த ராகிப் ஹசன் என்ற முஸ்லிம் இளைஞர் ஒரு தகராறில் கொல்லப்பட்டதே இந்த வன்முறைக்குத் தூண்டுதலாகக் கூறப்படுகிறது. இளைஞர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நோக்கில், தச்பாரா சந்தைப் பகுதியில் வசிக்கும் அப்பாவி இந்து குடும்பங்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலால் சுமார் 100-க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து, கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வங்கதேசம்

தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த வங்கதேசப் பாதுகாப்புப் படையினர் வன்முறை கும்பலைக் கலைத்தனர். தற்போது அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வங்கதேசத்தில் அவ்வப்போது சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்கள் சர்வதேச அளவில் மனித உரிமை அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.