ஸ்ரீபெரும்புதூரில் 100 பேருக்கு வாந்தி, மயக்கம்... கெட்டுப்போன பிரியாணி வழங்கிய கேட்டரிங் நிறுவனத்திற்கு சீல்!

 
சீல் பிரியாணி மருத்துவமனை வாந்தி மயக்கம் சீல் பிரியாணி மருத்துவமனை வாந்தி மயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனியார் தொழிற்சாலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாந்தி, மயக்கமடைந்த சம்பவத்தின் எதிரொலியாக, கெட்டுப்போன பிரியாணி வழங்கிய தனியார் கேட்டரிங் நிறுவனத்தை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக மூடி சீல் வைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஆலையில் நேற்று மதிய உணவு சாப்பிட்ட தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில், அவர்கள் சாப்பிட்ட பிரியாணி முற்றிலும் கெட்டுப்போய் 'உணவு நச்சாக' மாறியதே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரியாணி வாந்தி மயக்கம்

மேலும், இந்த விவகாரத்தில் கேட்டரிங் நிறுவனத்தின் மிக மோசமான அலட்சியப் போக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மதிய உணவின் போது பரிமாறப்பட்ட பிரியாணியில் இருந்த கோழிக்கறியில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதாகத் தொழிலாளர்கள் அப்போதே சமையல் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த புகாரைப் பொருட்படுத்தாத கேட்டரிங் நிர்வாகம், அலட்சியமாக அதே கெட்டுப் போன பிரியாணியைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்குப் பரிமாறியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொழிலாளர்களின் உயிருடன் விளையாடிய இந்த விவகாரம் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் சம்பந்தப்பட்ட தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

பிரியாணி

அங்குப் பயன்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் சுகாதாரமற்ற முறையைக் கண்டறிந்த அதிகாரிகள், உடனடியாக அந்த கேட்டரிங் நிறுவனத்தை மூடி சீல் வைத்தனர். மேலும், அங்கிருந்த உணவு மாதிரிகள் ஆய்வக சோதனைக்காகக் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தீவிர நச்சுப் பாதிப்பால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பெண் தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாகக் கேட்டரிங் நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.