கேரளாவில் 75% மேல் வாக்குப்பதிவு - வெயிலையும் மீறித் திரண்ட வாக்காளர்கள்!
கேரள மாநிலத்தின் 140 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த நிலையில், தோராயமாக 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, நண்பகல் 12 மணி வரை மிக வேகமாக நடைபெற்றது. பிற்பகல் வேளையில் கடும் வெயில் காரணமாக அடுத்த 3 மணி நேரம் வாக்காளர்கள் வருகை சற்று குறைந்திருந்தது. மீண்டும் மாலை 3 மணிக்குப் பிறகு இளம் வாக்காளர்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்துத் தரப்பினரும் திரண்டு வந்ததால், வாக்குச்சாவடிகளில் கூட்டம் அலைமோதியது.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் (கண்ணூரில் வாக்களித்தார்). எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி. சதீசன், மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் பல முன்னணித் திரைப்பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களின் வசதிக்காகச் செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தேர்தல் அதிகாரிகள் மூலம் நேரடிக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி (LDF) மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) இடையே நேரடிப் போட்டி நிலவும் நிலையில், இந்த 75 சதவீத வாக்குப்பதிவு யாருக்கு வெற்றி வாய்ப்பைத் தரும் என்பது மே 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.
