தமிழகத்தில் நெல் கொள்முதல் 10 லட்சம் டன் சரிவு... ரேஷன் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
தமிழகத்தில் நடப்புப் பருவத்தில் நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 10 லட்சம் டன் குறைந்துள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கிய கொள்முதலில் இதுவரை 4.50 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ரேஷன் அரிசி விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது எனத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

தமிழகத்தில் நடப்புக் கொள்முதல் பருவத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 4.50 லட்சம் டன் நெல் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 14.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் கொள்முதல் அளவு 10 லட்சம் டன் சரிந்துள்ளது.
தற்போது மாநிலத்தில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் 7.04 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் குறைந்திருந்தாலும், மத்தியத் தொகுப்புக் கிடங்குகளில் தமிழகத்திற்கான போதிய அரிசி கையிருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், முந்தைய பருவத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பொது விநியோகத் திட்டத்தின் (ரேஷன்) கீழ் அரிசி விநியோகத்தில் எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்படாது என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
