பழனியில் காட்டாறு போல் திரண்டு வந்த பக்தர்கள் ... 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!
முருகனின் அறுபடை வீடுகளில் நாளை தைப்பூசம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இதன் அடிப்படையில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா பிப்ரவரி 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இதனையடுத்து தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உட்பட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. இந்த சூழலில் தைப்பூச திருவிழா மற்றும் வார விடுமுறையையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் சாலை, தாராபுரம் சாலை, உடுமலை சாலை உட்பட பல பகுதிகளில் வழிநெடுகிலும் பக்தர்கள் அணிவகுத்து வருகின்றனர். அப்போது முருகனை நினைத்து பாட்டு பாடியும், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியும் வருகின்றனர். பின்னர் பழனிக்கு வந்ததும் பக்தர்கள் இடும்பன்குளம், சண்முகநதி பகுதியில் புனித நீராடி வருகின்றனர். இதற்காக பக்தர்களின் பாதுகாப்பு கருதி பழனி இடும்பன் குளத்தில் படகு மூலம் தீயணைப்பு படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பெரியநாயகி அம்மன் கோவில், திருஆவினன்குடி, பழனி முருகன் கோவில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் அலகு குத்தியும், முடிக்காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். அடிவாரத்தில் இருந்து பழனி கோவிலுக்கு செல்லும் வழிகளான படிப்பாதை, யானைப்பாதை, மின்இழுவை ரயில், ரோப்கார் நிலையம் இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்டம் காரணமாக பழனி முருகன் கோவிலில் பொது, கட்டளை, கட்டண தரிசனம் அனைத்து தரிசன வழிகள், கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். இந்நிலையில் நாளை தைப்பூச திருவிழா கொண்டாடப்படுவதை ஒட்டி பழனி முருகன் கோவிலில் இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை விரைவு தரிசனக் கட்டணச் சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டு, அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 100 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஐஜி, 2 டிஐஜி, 5 எஸ்.பி.க்கள் தலைமையில் 3500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னர் நாளை தைப்பூச நாளில் அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
