"பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்" - இந்தியாவுக்குப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் பகிரங்க மிரட்டல்!

 
பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர்

இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் இந்தியாவுக்கு எதிராகச் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ராவல்பிண்டியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தங்கள் நாட்டின் மீது கை வைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தார். “பாகிஸ்தானின் இறையாண்மையை யாராவது சோதிக்க நினைத்தால், அவர்களுக்குக் கடுமையான பதிலடி வழங்கப்படும்” என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

 ராணுவ ஜெனரல் அசீம் முனீர்

கடந்த ஆண்டு மே 7-ம் தேதி இந்திய ராணுவம் எல்லை தாண்டிச் சென்று, பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்ட இந்தத் தாக்குதல், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்குப் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. இந்திய ராணுவத்தின் இந்தத் துணிச்சலான நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கவனித்த நிலையில், பாகிஸ்தான் தரப்பில் இது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

காஷ்மீர்

இந்தத் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ஆசிம் முனீரின் இந்தப் பேச்சு இரு நாடுகளிடையே மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வரும் பாகிஸ்தான், தனது ராணுவ பலத்தைக் காட்டும் நோக்கில் இத்தகைய கருத்துகளை முன்வைத்து வருகிறது. இந்திய ராணுவம் எப்போதுமே எல்லைப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதால், எல்லையில் கண்காணிப்புப் பணிகள் தற்போது மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.