பாகிஸ்தான் இராணுவத் தலைவருக்கு அமெரிக்க ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு.?

அமெரிக்க ராணுவ 250வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கலந்து கொள்ள பாகிஸ்தான் தலைமை ராணுவ தளபதி அசிம் முனிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளின் தலைமை தளபதிகள் கலந்து கொள்ளும் நிகழ்வு ஜூன் 14ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் அமெரிக்க அதிபர் டிரம்பின் 79 வது பிறந்தநாளும் கூட.
பாகிஸ்தானின் சீன ஆதரவு நிலைப்பாட்டை மாற்றவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது இந்திய வெளியுறவுத்துறையின் தோல்வி என காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இந்நிலையில், வாஷிங்டனில் நடைபெறும் அமெரிக்க இராணுவ அணிவகுப்பில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தனது வருகையை உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் மூலம், பாகிஸ்தான் ராணுவத்துடனான அமெரிக்காவின் உறவு மேலும் பலப்படுத்தப்படும். முனீர் இந்த பயணத்தின் போது அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பென்டகனின் மூத்த அதிகாரிகளுடனும் சந்திப்புகளை நடத்தக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து உயர்மட்ட இராணுவ ஈடுபாட்டை பாகிஸ்தானோ அல்லது அமெரிக்காவோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், இந்தியாவும் பாகிஸ்தானும் போர் போன்ற சூழ்நிலையைச் சந்தித்திருப்பதால், பாகிஸ்தான் இராணுவத் தலைவரின் அமெரிக்க பயணத்தை இந்தியா உன்னிப்பாக கவனிக்கும். இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையை அமெரிக்கா தான் பேச்சுவாரத்தை நடத்தி சமரசம் செய்ததாக டிரம்ப் பலமுறை கூறியுள்ளார். இத்தகவலை மத்திய அமைச்சகம் உறுதியாக நிராகரித்துவிட்டது.
இதற்கு முன்னதாக முனீர் 2023 ம் ஆண்டு வாஷிங்டனுக்கு பயணம் செய்தார், அப்போது அவர் ஜோ பைடனின் பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின், துணை வெளியுறவு அமைச்சர் ஸ்டீபன் பிக்வென் மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஆகியோரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.