பாகிஸ்தானில் போலீஸ் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் பதுங்கித் தாக்குதல்… 10 போலீசார் பலி!
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் போலீசார் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர்.
கோஹாட் மாவட்டத்தில் சட்டவிரோத தங்கச் சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக போலீசார் சோதனை நடத்தினர். அந்தப் பணியை முடித்துவிட்டு போலீசார் வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தர்புகாச் பகுதியில் பதுங்கியிருந்த ஆயுதம் ஏந்திய கும்பல் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதையடுத்து போலீசாருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 10 போலீசார் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் துணைக் காவல் கண்காணிப்பாளர் ஹைதர் ஜமான் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் அடங்குவர்.
18 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்த மோதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கைபர் பக்துன்க்வா மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதலின்போது 5 போலீஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
