பாகிஸ்தானில் ரூ.10,000-ஐ தாண்டிய எல்பிஜி சிலிண்டர் விலை? ஈரான் எல்லை மூடலால் பொதுமக்கள் கடும் அவதி!
ஈரானுடனான எல்லை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், பாகிஸ்தானில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிலிண்டர் விலை வேகமாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
12 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை முன்பு 4,500 பாகிஸ்தான் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது பல பகுதிகளில் 7,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. லாகூரில் 7,500 ரூபாயாகவும், ஸ்கார்டுவில் 8,200 ரூபாயாகவும் விற்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானில் இருந்து தினமும் சுமார் 7,000 டன் எல்பிஜியை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. இரு நாடுகளுக்கு இடையிலான முக்கிய எல்லைக் கடப்புகளில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் எரிவாயு ஏற்றிவந்த லாரிகள் தேங்கியுள்ளன. விநியோகம் விரைவில் சீராகாவிட்டால் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
