பாகிஸ்தானில் பள்ளி மேற்கூரை இடிந்து பயங்கரம்...17 மாணவர்கள் பலி!

 
பாகிஸ்தான்

 

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பெஷாவர் நகரில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 17 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆசிரியர் உள்பட பலர் சிக்கிக்கொண்டனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வகுப்புகள் நடந்தபோது நேர்ந்த விபத்து

பெஷாவர் நகரின் திர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது திடீரென பள்ளியின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதில் வகுப்பறைகளில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 13 வயதுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிகள் தீவிரம்

இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.