நேரலையில் கண்ணீர் விட்டு அழுத பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்!
பாகிஸ்தான் திரையுலகின் பிரபல நடிகையான வீணா மாலிக், தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தனது உடல் எடை மற்றும் தோற்றம் குறித்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களால் மனமுடைந்து கண்ணீர் விட்டு அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேரலையின் போதே தனது காலணிகளைக் கழற்றியதோடு, முகத்திலிருந்த மேக்கப்பையும் டிஷ்யூ பேப்பரால் துடைத்து அகற்றித் தனது இயல்பான தோற்றத்தை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கிடம், சமூக வலைதளங்களில் அவரைப் பற்றிப் பரவும் விமர்சனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த வீணா மாலிக், கடந்த சில காலமாகத் தனது உடல் எடை, வயது மற்றும் தோற்றம் குறித்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களாலும் உருவக்கேலிகளாலும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறி, நிகழ்ச்சியின் நேரலையிலேயே உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் விட்டு அழுதார்.
தொடர் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே வீணா மாலிக் தான் அணிந்திருந்த உயரமான காலணிகளைக் கழற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்துத் தனது முகத்திலிருந்த ஒப்பனை அனைத்தையும் முழுமையாகத் துடைத்து அகற்றினார். எந்தவித செயற்கைப் பூச்சும் இன்றி தனது உண்மையான, இயல்பான முகத் தோற்றத்தைக் கேமரா முன் காட்டிய அவர், மனிதர்களை அவர்களின் இயல்பான தோற்றத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
நேரலை நிகழ்ச்சியில் வீணா மாலிக் தன்னுடைய மேக்கப்பைக் கலைத்து விட்டு, தனது உணர்வுகளை வெளிப்படுத்திய வீடியோ காட்சிகள் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. திரையுலகப் பிரபலங்கள் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் உருவக்கேலி மற்றும் இணைய வழித் தாக்குதல்களுக்கு எதிராக வீணா மாலிக் எடுத்த இந்தத் துணிச்சலான நடவடிக்கையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். சினிமா ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆதரவாகத் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
