இந்தியப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கப்பல் மோதல்... இந்தியா சம்மன் அனுப்பி கண்டனம்!
சர்வதேசக் கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் உரசி மோதிய சம்பவத்திற்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் சம்மன் அனுப்பியுள்ளது.
இன்று ஓமனுக்குக் கிழக்கே சுமார் 220 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட அரபிக்கடலின் சர்வதேச நீர்ப்பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதிக்கு வந்த பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மிகுந்த வேகத்துடனும் பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கப்பட்டு, இந்தியப் போர்க்கப்பலின் அருகில் வந்து உரசிக் கொண்டு சென்றது. எனினும், இந்தியக் கப்பலுக்குப் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பாகிஸ்தானின் இந்தத் தொழில்முறையற்ற செயல்பாடு குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரி சாத் அகமத் வாரிச்சை வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது.
ராணுவப் பயிற்சிகள் மற்றும் படை அசைவுகள் குறித்து முன்அறிவிப்பு வழங்க வழிவகுக்கும் 1991-ஆம் ஆண்டின் இந்தியா - பாகிஸ்தான் ஒப்பந்தத்தின் 10-வது பிரிவை இந்த நடவடிக்கை நேரடியாக மீறியுள்ளதாக இந்தியா தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திடம் இதற்கான கண்டனத்தைப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
