அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்!
"ஒரு நாகரிகமே அழியும் அபாயம்" என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள 2 வார காலப் போர் நிறுத்தம், தற்போது அமைதிப் பேச்சுவார்த்தைக்கான அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மத்தியஸ்தம் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இந்தப் போர் நிறுத்தம் உலக நாடுகளுக்கு ஒரு நிம்மதியான செய்தி என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போர் நிறுத்தம் உறுதி: லெபனான் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் அமெரிக்கா, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகளிடையே உடனடிப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையை இறுதி செய்து, ஒரு நிலையான ஒப்பந்தத்தை எட்டும் வகையில், இரு நாடுகளின் உயர்மட்டத் தூதுக்குழுவினரும் வரும் ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை அன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முழுமையாகத் திறக்கும் பட்சத்தில் தாக்குதலை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சம்மதித்திருந்தார். பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடனான ஆக்கப்பூர்வமான உரையாடல்களே இந்த மாற்றத்திற்குப் பின்னணியாக இருந்ததை டிரம்ப் ஏற்கனவே ஒப்புக் கொண்டார்.
ஏப்ரல் 10-ம் தேதி தொடங்கவுள்ள இந்த ‘இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள்’, வளைகுடா நாடுகளில் நிலவும் நீண்டகால மோதலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானிடமிருந்து பெறப்பட்ட 10 அம்சத் திட்டம் இந்தப் பேச்சுவார்த்தையின் மையமாக இருக்கும். இப்பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் சீராகி, பெட்ரோல், டீசல் விலை குறையும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.
பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர நகர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியத்திலும் அந்நாட்டின் செல்வாக்கை உயர்த்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
