பாகிஸ்தான் அதிரடி: 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மதுபான ஏற்றுமதி தொடக்கம்!

 
liquor liquor

 

பாகிஸ்தானின் முன்னணி உள்நாட்டு மதுபான உற்பத்தி நிறுவனமான ‘முர்ரி புரூவரி’ (Murree Brewery), சுமார் அரை நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வெளிநாடுகளுக்கு மதுபானங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானில் முஸ்லிம்கள் மது அருந்துவதற்கு நீண்டகாலமாகத் தடை நீடித்து வரும் நிலையில், இந்நிறுவனம் தனது பீர் மற்றும் மதுபான வகைகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உறுப்பினராக இல்லாத நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இங்கிலாந்து, ஜப்பான், போர்ச்சுகல் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு முதற்கட்டமாக மதுபானங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் மேலாளர் ரமீஸ் ஷா தெரிவித்துள்ளார். 1860-களில் பிரிட்டிஷ் வீரர்களுக்காகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், 1977-ல் அப்போதைய பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ விதித்த மதுத்தடையால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. தற்போது பொருளாதார நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான், அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்காக இந்த ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் மென்பானங்கள் மற்றும் பழச்சாறுகள் மூலம் சுமார் 100 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ள முர்ரி புரூவரி நிறுவனம், இப்போது மதுபான ஏற்றுமதியின் மூலம் தனது வருவாயைப் பன்மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காகப் பல்வேறு நாடுகளுடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் இந்நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. பாகிஸ்தான் அரசின் இந்தத் திடீர் முடிவு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.