போர் பதற்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் 4 நாட்கள் சீனா அரசு முறைப் பயணம்!

 
china china

பாகிஸ்தான் மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சீனப் பிரதமர் லி சியாங்கின் அதிகாரப்பூர்வ அழைப்பை ஏற்றுப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் நாளை (மே 23) முதல் மே 26 ஆம் தேதி வரை 4 நாட்கள் சீனாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த உயர் மட்டப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால உத்திப்பூர்வ உறவை மேலும் வலுப்படுத்தும் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி சியாங் ஆகியோரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவித்தார். இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள், பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் 'சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட' (CPEC) திட்டத்தின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்துத் தலைவர்கள் விரிவாக ஆலோசிக்க உள்ளனர். மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான 75-வது தூதரக ஆண்டு விழா வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

சமீபகாலமாகப் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்குச் சீனா தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணத்தின் போது இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்துத் தங்களின் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொள்ள உள்ளனர். டிஜிட்டல் தொழில்நுட்பம், விவசாய மேம்பாடு மற்றும் வர்த்தகம் சார்ந்த பல்வேறு புதிய இருதரப்பு ஒப்பந்தங்களும் இத்தருணத்தில் கையெழுத்தாக உள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.