19 குழந்தைகள், 7 கர்ப்பிணி பெண்கள் உட்பட பலர் பலி... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் கொடூரம்... ரகசிய அறிக்கை அம்பலம்!

 
பாரதிராஜா பாரதிராஜா

 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் கடந்த ஜூன் 5 முதல் ஜூன் 9 வரையிலான தேதிகளில் அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் நடத்திய கொடூரமான ஒடுக்குமுறை மற்றும் தாக்குதல்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் ரகசிய அறிக்கை ஒன்று தற்பொழுது வெளியாகி உள்ளது. மனித உரிமை மீறல்கள், கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராகப் போராடி வரும் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி அமைப்பினரை ஒடுக்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக அந்த அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளியாகியுள்ள அந்த ரகசிய அறிக்கையின்படி, பாகிஸ்தான் படையினர் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலில் 19 குழந்தைகள் மற்றும் 7 கர்ப்பிணிப் பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்காக பாகிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் இருந்து சுமார் 14,000 பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு கொண்டு வந்து குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடக்கும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் மறைப்பதற்காக, அந்தப் பகுதி முழுவதும் இணையச் சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் தனது சொந்த நிர்வாகத் தோல்விகளையும், மனித உரிமை மீறல்களையும் மூடிமறைக்க பாகிஸ்தான் அரசு தொடர்ந்து பொய் செய்திகளையும், போலியான வீடியோக்களையும் பரப்பி வருவதாகக் கடுமையாகச் சாடியுள்ளது. அங்குள்ள பொதுமக்கள் மீது நடத்தப்படும் இத்தகைய அராஜகங்கள் மற்றும் கொடூரத் தாக்குதல்களுக்குப் பாகிஸ்தான் அரசைச் சர்வதேச சமூகம் தண்டித்து உரியப் பதில் சொல்ல வைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் லண்டன் போன்ற வெளிநாடுகளிலும் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் புலம்பெயர்ந்த காஷ்மீர் மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.