ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: 6 சுற்றுலா பயணிகள் பலி, 3 பேர் மாயம்!
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு ஏரியில் சுற்றுலா பயணிகள் பயணித்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பயணிகள் ஏரி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இந்தத் துயரமான விபத்துச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சுற்றுலாத் தலமான அப்பர் ஸ்வாட் மாவட்டத்தின் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள சைபுல்லா ஏரியில் நேற்று இந்த விபத்து நடந்துள்ளது. அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் ஆர்வமுடன் ஏரியில் படகு பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாகப் படகு தண்ணீரில் கவிழ்ந்ததை அடுத்து, அங்கிருந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கடுமையாகப் போராடிய மீட்புப் படையினர் 6 பேரைச் சடலமாக மீட்ட நிலையில், உயிரிழந்தவர்கள் பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும் ஏரி நீரில் மூழ்கிக் காணாமல் போன 3 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து தொடர்பாகக் கைபர் பக்துன்க்வா முதல்-அமைச்சர் சோஹைல் அப்ரிடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதோடு, அலட்சியமாகச் செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
