16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை... பாகிஸ்தான் மாகாணச் சட்டமன்றத்தில் தீர்மானம் !
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்தில், 16 வயதுக்கு உட்பட்ட
சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சாரா அகமது, இந்த முக்கியமான தீர்மானத்தை இன்று அவையில் தாக்கல் செய்தார்.

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாப் கட்சியும் முழு ஆதரவு தெரிவித்த நிலையில், அவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தடையற்ற இணையப் பயன்பாட்டின் காரணமாகச் சிறார்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கும், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி வருவதாகத் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இதே போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி மாகாணச் சட்டமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதனைப் பின்பற்றி மத்திய அரசு தகுந்த சட்டத்தைக் கொண்டுவந்து 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
