ஒரே வீட்டில் 2 மக்கள் பிரதிநிதிகள்... அசத்திய பாலக்காடு தம்பதி!

 
palakkadu palakkadu

கேரள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளனர். கோங்காடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட துளசி என்ற பெண் வேட்பாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சாந்தகுமாரியை 3,706 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியை நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் பின்னணியில் ஒரு சுவாரசியமான தகவல் ஒளிந்துள்ளது. வெற்றி பெற்ற துளசியின் கணவர் வி.கே. ஸ்ரீகண்டன் ஏற்கனவே பாலக்காடு நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி-யாகப் பதவி வகித்து வருகிறார். தற்போது துளசி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதன் மூலம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர் மற்றும் மனைவி இருவரும் முறையே எம்.பி மற்றும் எம்.எல்.ஏ ஆகிய பதவிகளை வகிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒரே வீட்டில் இரண்டு மக்கள் பிரதிநிதிகள் உருவானது குறித்து அந்தத் தொகுதி மக்கள் பெருமிதத்துடன் பேசி வருகின்றனர்.

தன்னைப் போலவே தனது மனைவியும் மக்கள் சேவையில் ஈடுபடத் தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக எம்.பி ஸ்ரீகண்டன் தெரிவித்துள்ளார். கேரள அரசியலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இத்தகைய உயர்ந்த பொறுப்புகளுக்குத் தேர்வாகியுள்ளது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. பாலக்காடு தொகுதி மக்களின் நலனுக்காகத் தாங்கள் இருவரும் இணைந்து தொடர்ந்து பாடுபடுவோம் என இந்தத் தம்பதியினர் உறுதி அளித்துள்ளனர். காங்கிரஸ் தொண்டர்கள் இந்த இரட்டிப்பு வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.