சர்க்கரை விலை உயர்வு... ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.80 அதிகரிப்பு!

 
 பால்கோவா

 

தமிழகத்தில் சர்க்கரை விலை அதிரடியாக உயர்ந்துள்ளதை அடுத்து, உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலையும் கிலோவுக்கு ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் இனிப்புப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விலை உயர்வு!

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்ட பால்கோவா தயாரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு தயாரிக்கப்படும் பால்கோவாக்கள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் வரை ஒரு கிலோ ரூ.320-க்கு விற்கப்பட்ட பால்கோவா, தற்போது ரூ.80 உயர்ந்து ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அரை கிலோ பால்கோவா ரூ.160-லிருந்து ரூ.200 ஆகவும், கால் கிலோ பால்கோவா ரூ.80-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரித்துள்ளது.

ஒரிஜினல் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா 😋 | இப்படி செய்து பாருங்க | Palkova Recipe in Tamil | Paalkova

 இதுகுறித்து தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறுகையில், "பால்கோவா தயாரிப்பிற்குப் பால் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் முக்கிய மூலப்பொருட்களாகும். கடந்த சில நாட்களாக சர்க்கரையின் விலை கிலோவுக்கு ரூ.25 வரை உயர்ந்து, தற்போது ரூ.72-க்கு விற்கப்படுகிறது. அத்துடன் பால் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இந்த கடுமையான விலை உயர்வால் பால்கோவா விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளனர். இந்த திடீர் விலை உயர்வு காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை சற்று சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.