ஆகஸ்ட் 11ம் தேதி பலுசிஸ்தான் சுதந்திர தினம் அறிவிப்பு... பாகிஸ்தானில் உச்ச கட்டப் பரபரப்பு!
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம் நீண்ட காலமாகத் தனி சுதந்திரம் கோரித் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1947 ஆகஸ்ட் 11 அன்று தனி நாடாக அறிவிக்கப்பட்ட பலுசிஸ்தான் அதன் பிறகு 1948 மார்ச் 27 அன்று பாகிஸ்தான் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பல ஆண்டுகளாகப் பலுசிஸ்தான் விடுதலை அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல்களும் அரசியல் கொந்தளிப்புகளும் நிலவி வருகின்றன.
தற்போது பலுசிஸ்தான் விடுதலை அமைப்புகள் அனைத்தும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 11ஆம் தேதியைப் பலுசிஸ்தானின் சுதந்திர தினமாகக் கொண்டாடப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது அப்பகுதியில் பெரும் அரசியல் தாக்கத்தையும் மத்திய அரசுக்கு எதிரான நேரடி சவாலையும் ஏற்படுத்தியுள்ளது. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய விடுதலை அமைப்புகள் தீவிரமாக முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாகப் பொதுமக்கள் தங்கள் வீடுகள், கல்வி நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பலுசிஸ்தானின் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்றும் தீவிரமாக அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு பதற்றமான சூழலும் நிலவி வருகிறது. பலுசிஸ்தான் விடுதலை அமைப்புகளின் இந்த அதிரடி முடிவு சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
