பங்குனி அமாவாசை.. ராமேஸ்வரம் முதல் அம்மா மண்டபம் வரை... தமிழகத்தின் புனித நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள்!
தமிழ் ஆண்டின் நிறைவு மாதமான பங்குனி மாதத்தில் வரும் அமாவாசை, ஆன்மிக ரீதியாக மிகவும் சக்தி வாய்ந்த நாளாகக் கருதப்படுகிறது. இன்று நாடு முழுவதும் பங்குனி அமாவாசை மிக விமரிசையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், பங்குனி மாத அமாவாசைக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. இது தமிழ் வருடத்தின் கடைசி அமாவாசை என்பதால், கடந்த ஓராண்டில் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கத் தவறியவர்கள், இன்று தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் அந்தப் பாவங்களிலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். சூரியனும் சந்திரனும் இணைந்திருக்கும் இந்த நாளில் பித்ருக்களின் ஆசி நேரடியாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இன்று அதிகாலை முதலே தமிழகத்தின் முக்கியப் புண்ணியத் தலங்களான ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருச்செந்தூர் கடல், திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி கரை, வேதாரண்யம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். முன்னோர்களின் பெயர்களைச் சொல்லி எள், தண்ணீர் இறைத்து 'பித்ரு தர்ப்பணம்' கொடுத்துப் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ராமேஸ்வரத்தில் முன்னோர்களுக்குப் பிண்டம் வைத்துப் பூஜித்து, கடலில் நீராடி இராமநாதசுவாமியைத் தரிசனம் செய்வது இன்று மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.
அமாவாசை தினத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மற்றும் வஸ்திர தானம் (துணி தானம்) செய்வது பெரும் புண்ணியத்தைத் தரும்.

பசுமாட்டிற்கு அகத்திக்கீரை அல்லது பழங்கள் வழங்குவது பித்ரு தோஷங்களை நீக்கி குடும்பத்தில் சுபிட்சத்தை உண்டாக்கும். மாலையில் வீட்டின் வாசலில் முன்னோர்களை நினைத்துத் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள், இன்று அமாவாசை விரதமிருந்து குலதெய்வத்தை வழிபடுவதன் மூலம் திருமணத் தடை, சந்தான பாக்கியம் இல்லாமை மற்றும் தொழில் முடக்கங்கள் நீங்கி நற்பலன்களைப் பெறுவார்கள் என்று ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
