பங்குனி உத்திரம்: முருகனின் அருளை வாரி வழங்கும் அற்புத விரதம்! திருமணத் தடை நீங்க செய்ய வேண்டிய எளிய வழிபாடு!

 
பங்குனி முருகன் முருகர் பங்குனி முருகன் முருகர்

தமிழ் வருடத்தின் 12-வது மாதமான பங்குனியும், 27 நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் இந்த நாள், 12 திருக்கரங்களைக் கொண்ட முருகப்பெருமானுக்கு மிக உகந்த நாளாகப் போற்றப்படுகிறது.

முருகனுக்கு ஏன் இந்த நாள் சிறப்பு?

சூரபத்மனை வென்ற பிறகு, இந்திரன் தனது மகள் தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்துக் கொடுத்த தினமே இந்த பங்குனி உத்திரம். முருகனை ஒரு 'முழுமையான' தெய்வமாக மாற்றிய இந்தத் திருமண நாள், பக்தர்களின் வாழ்விலும் குறைகளை நீக்கும் நாளாகக் கருதப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்:

இன்று அதிகாலையிலேயே நீராடி விரதத்தைத் தொடங்க வேண்டும். நாள் முழுவதும் உணவு உட்கொள்ளாமல் முருகனின் நாமத்தைச் செபிப்பது சிறப்பு. முருகனுக்குப் பால்குடம் எடுப்பவர்கள், நேர்த்திக்கடனை முடித்த பின்னரே உணவருந்த வேண்டும். விரதம் இருக்க இயலாதவர்கள், அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று அங்கு நடைபெறும் தெய்வானை - முருகன் திருக்கல்யாண வைபவத்தைத் தரிசிப்பது கோடி புண்ணியத்தைத் தரும்.

முருகப்பெருமானின் அபிஷேகத்திற்குப் பால் வாங்கிக் கொடுப்பது அல்லது வீட்டிலேயே வேல் மற்றும் முருகன் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறந்தது.

சுவாமிமலை முருகன்

வேண்டுதல் நிறைவேற 'மஞ்சள் முடிச்சு' பரிகாரம்:

திருமணம், குழந்தை பாக்கியம், சொந்த வீடு, வேலைவாய்ப்பு போன்ற நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறப் பக்தர்கள் இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றலாம்.

ஒரு வெள்ளைத் தாளில் உங்கள் வேண்டுதலைத் தெளிவாக எழுதிக் கொள்ளவும். அதனுடன் ரூ.11 காணிக்கையை வைத்து, ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாகக் கட்டவும். இந்த முடிச்சை அருகிலுள்ள முருகன் கோவில் உண்டியலில் செலுத்தி மனமுருகப் பிரார்த்தனை செய்யவும். வேண்டுதல் நிறைவேறியவுடன், அடுத்த ஆண்டு பங்குனி உத்திரத்தன்று அன்னதானம் செய்தோ அல்லது மீண்டும் விரதமிருந்தோ உங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தலாம்.

முருகன் முருகர் சஷ்டி

இந்த விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும், தடைப்பட்ட சுப காரியங்கள் கைகூடும், தீராத நோய்கள் தீரும் என்பது ஐதீகம். இன்று மாலை 7 மணிக்கு மேல் முருகனை வழிபட்ட பின்னரே விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே 'கந்த சஷ்டி கவசம்' பாராயணம் செய்வது இரட்டிப்பு பலன் தரும்.