பங்குனி உத்திரம்: ஏப்ரல் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
விடுமுறை விடுமுறை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத் திருவிழா தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். குறிப்பாக நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்துவது வழக்கம். பக்தர்களின் வசதிக்காகவும், அவர்கள் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்பதை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் இந்த விடுமுறையை அறிவித்துள்ளது.

பங்குனி உத்திரம்

திருநெல்வேலி மாவட்டக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் இந்த விடுமுறை உத்தரவு பொருந்தும். மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான அலுவலகங்கள் வழக்கம்போல் இயங்கும்.

உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதால், அந்த வேலை நாளை ஈடு செய்யும் விதமாக, ஏப்ரல் மாதத்தில் வரும் ஒரு சனிக்கிழமை (தேதி பின்னர் அறிவிக்கப்படும்) வேலை நாளாகச் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நெல்லையப்பர் காந்திமதி

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றம் தொடங்கி திருவிழா கலைகட்டத் தொடங்கியுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நெல்லை மாவட்ட மக்களும் தங்களது சொந்த ஊருக்கு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.