பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு... ரூ.27 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் - 5 பயணிகள் கைது!
பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதுடன், இதுதொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.
பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்குப் பாங்காக்கில் இருந்து உயர்ரக கஞ்சா தொடர்ந்து கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாங்காக்கில் இருந்து தனித்தனி விமானங்களில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பெருமளவிலான போதைப்பொருட்கள் சிக்கின. முதல் சோதனையில், இரு பயணிகளிடமிருந்து ரூ.12.53 கோடி மதிப்பிலான 36 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றொரு விமானத்தில் வந்த பயணியிடமிருந்து ரூ.5.35 கோடி மதிப்பிலான 15.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஒரு விமானத்தில் வந்த இரு பயணிகளிடமிருந்து ரூ.9.38 கோடி மதிப்பிலான 26 கிலோ உயர்ரக கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதன் மூலம் மொத்தம் ரூ.27 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 பயணிகள் மீதும் விமான நிலையக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
