பாரா வில்வித்தை: 2 தங்கம், 1 வெள்ளி வென்று இந்திய வீரர்கள் அசத்தல்!
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் பாரா உலக வில்வித்தை சீரிஸ் 3-ம் நிலை போட்டியில் இந்திய வீராங்கனைகளும் வீரர்களும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதங்களைக் குவித்து வருகின்றனர்.
ஆண்களுக்கான காம்பவுண்ட் அணிகள் இறுதிப்போட்டியில் இந்தியாவின் தோமன் குமார் மற்றும் ஷியாம் சுந்தர் ஸ்வாமி ஜோடி களம் கண்டது. ஈராக் அணிக்கு எதிரான இப்போட்டியில் 152-139 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்று அவர்கள் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினர்.

ஆண்களுக்கான ரிகர்வ் அணிகள் பிரிவில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங் மற்றும் விஜய் சன்டி ஜோடி மோதியது. சுலோவாக்கியா அணிக்கு எதிரான இப்போட்டியில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று மற்றொரு தங்கப்பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்தனர்.
பெண்களுக்கான ரிகர்வ் அணிகள் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பாவ்னா மற்றும் பூஜா ஜோடி பலமான சீனா எதிரணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இப்போட்டியில் 0-6 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்தாலும், அவர்கள் வெள்ளிப் பதக்கத்தைக் வென்று அசத்தினர்.
