பிரபல விளையாட்டு வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிராக் தியாகி. 24 வயதுடைய இவர் தேசிய அளவிலான பாரா தடகளப் போட்டிகளில் பங்கேற்றுத் தங்கப் பதக்கம் வென்ற ஒரு சிறந்த விளையாட்டு வீரர் ஆவார். பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று, ஜப்பானில் நடைபெற உள்ள சர்வதேச விளையாட்டுப் போட்டிக்கும் இவர் தகுதி பெற்றிருந்தார். இந்தச் சூழ்நிலையில் சாய் குஞ்ச் என்ற பகுதியில் உள்ள ஒரு காலி இடத்தில் சிராக் தியாகி துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்துத் தகவல் அறிந்து வந்த காசியாபாத் காவல்துறையினர், அவரது உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிராக்கின் நண்பரான யாஷ் கட்டிக் என்ற வாலிபர் மீது காவல்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த அவரைப் பிடித்துக் காவல்துறையினர் தங்களின் பாணியில் விசாரணை நடத்தியபோது, அவரே சிராக்கை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
கைது செய்யப்பட்ட யாஷ் கட்டிக் என்பவரும் ஒரு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பின் போது, யாஷுக்கு எதிராகச் சிராக் தியாகி புகார் அளித்ததால் அவரது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே, சிராக்கை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் பின்புறமாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக யாஷ் கூறியுள்ளார்.
