சித்தா டாக்டரிடம் ரூ.1.29 கோடி மோசடி: ஊழியர்கள் உட்பட 2 பேர் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த 65 வயது சித்தா மருத்துவர் வரதராஜன், சித்த மருந்துகள் தயாரித்து விற்பனை செய்யும் 3 நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவரது நிறுவனங்களில் பணிபுரிந்த சரண்யா, பூபாலன், கணேஷ் பாண்டி மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் 2024-ஆம் ஆண்டு முதல் வரவு-செலவு கணக்குகள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளை வரதராஜனின் செல்போன் மூலம் கவனித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், நிறுவனங்களுக்கு வரும் பணத்தை முறைகேடாகத் தங்கள் வங்கிக் கணக்குகளுக்கும், சரண்யாவின் தாயார் ராமுலட்சுமி மற்றும் உறவினர்கள் சிலரின் கணக்குகளுக்கும் மாற்றி மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. வரதராஜனின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளைச் சரண்யா அழிப்பதைப் பார்த்த மற்றொரு மருத்துவர் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்து வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்த வரதராஜன், மொத்தம் ரூ.1 கோடியே 29 லட்சத்து 43 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதை அறிந்து பரமக்குடி நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார் ராமுலட்சுமி மற்றும் வடிவேல் முருகன் ஆகிய 2 பேரைக் கைது செய்து, மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
