காட்டுப்பன்றி தாக்கி பெண் சத்துணவு அமைப்பாளர் பலி... பரமக்குடியில் சோகம் !
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டுப்பன்றி தாக்கியதில் சத்துணவு அமைப்பாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரமக்குடி அருகே அரியனேந்தல் பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (56). இவர் குமரகுடி அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக காளிமுத்து சென்றுள்ளார்.அப்போது அங்கு வந்த காட்டுப்பன்றி ஒன்று திடீரென அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. காட்டுப்பன்றி தாக்கியதில் அவரது தொடை மற்றும் முழங்கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த காளிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காளிமுத்துவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி தாலுகா போலீசாரும், வனத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அப்பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
