பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட எதிர்ப்பு! தமிழக அரசுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதற்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மென்பொறியாளரும், பதிப்பகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவருமான கவுதமன் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.680 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலங்களில் 48 சதவீதம், அதாவது 1,700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், திட்டத்தைக் கைவிடும் முடிவை அரசு உரிய தொழில்நுட்ப ஆய்வு, நிபுணர் குழு அறிக்கை மற்றும் பொருளாதார மதிப்பீடு இன்றி எடுத்துள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கவும், திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியலமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கவும், திட்டத்தை மீண்டும் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடவும் கோரியுள்ளார்.இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது
