பரனூர் டோல்கேட்டில் இனி வாகனங்கள் நிற்க வேண்டாம்! இன்று முதல் புதிய Toll முறை அமல்!

 
சுங்க சாவடி

 

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் இன்று முதல் புதிய முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படாமல் தொடர்ந்து செல்ல முடியும்.சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முக்கியமான சுங்கச்சாவடியாக உள்ள பரனூரில், ‘மல்டி லேன் ஃப்ரீ ஃப்ளோ’ (MLFF) எனப்படும் தடையற்ற சுங்க வசூல் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சுங்கச் சாவடி

இந்த புதிய முறையில் வாகனங்கள் சுங்கச்சாவடி முன்பு நின்று கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. சாலையின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள நவீன கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் வாகனங்கள் அடையாளம் காணப்படும்.குறிப்பாக, வாகனத்தின் பதிவு எண்ணை தானாகக் கண்டறியும் ANPR கேமராக்களும், FASTag-ஐ அடையாளம் காணும் RFID தொழில்நுட்பமும் இணைந்து செயல்படும். வாகனம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போதே FASTag கணக்கில் இருந்து உரிய கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.

இதனால் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நீண்ட வரிசை மற்றும் காத்திருப்பு நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்கள் மீண்டும் மீண்டும் வேகத்தை குறைத்து நிறுத்தி இயக்க வேண்டிய நிலை இல்லாததால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவும் குறைய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் இந்த முறைக்கு மாற்றப்படும் முதல் சுங்கச்சாவடியாக பரனூர் அமைந்துள்ளது. இதைத் தொடர்ந்து நெமிலி மற்றும் சென்னசமுத்திரம் உள்ளிட்ட மேலும் சில சுங்கச்சாவடிகளிலும் MLFF முறையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுங்கசாவடி டோல்கேட்

பரனூர் வழியாக சென்னை மற்றும் தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு இந்த புதிய நடைமுறை முக்கிய மாற்றமாக இருக்கும். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.