திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு.. சாதியை தூக்கி வீசி சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதலர்கள்..!

 
சாதி மறுப்பு திருமணம்

இருவேறு சமூகத்தைச் சேர்ந்த காதலர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி  சாதி மறுப்பு சுய மரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அய்யலூர் பகுதியைச் சேர்ந்த காவியா. இவரும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டம் பூசாரிப்பட்டி பகுதியைச் சஞ்சய் காந்தி ஆகிய இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். சஞ்சய் காந்தி டிப்ளமோ ஐடிஐ படித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதனால், இரு தரப்பு பெற்றோரும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் கார்னர் தந்தை பெரியார் சிலை முன்பு, பெரியார் உணர்வாளர்கள் முன்னிலையில் காவியா சஞ்சய் காந்தி இருவருக்கும் இன்று (அக்.20) காலை 10 மணியளவில் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைக்கப்பட்டது. இவர்களின் சுயமரியாதை திருமணத்திற்குச் சாமானிய மக்கள் நல கட்சியின் கரூர் மாநகரச் செயலாளர் தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகச் சாமானிய மக்கள் நல கட்சி மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான குணசேகரன் கலந்து கொண்டு மணமக்களுக்குச் சுயமரியாதை உறுதிமொழி ஏற்க வைத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக நிர்வாகி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் நகர பொருளாளர் ரகுமான், சாமானிய மக்கள் நல கட்சி கரூர் மாவட்டச் செயலாளர் சண்முகம், பெரியார் உணர்வாளர்கள் சாமியப்பன், நாட்ராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காவியா சஞ்சய் காந்தி தம்பதியினர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பதியினர் கூறுகையில், "தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்றுச் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தனர்.

பின்னர், திருமணத்தை நடத்தி வைத்த சாமானிய மக்கள் நலக் கட்சியின், மாநில பொதுச்செயலாளரும், வழக்கறிஞருமான குணசேகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்றைய இளைஞர்கள் தாமாக முன்வந்து சாதி மறுப்பு கொள்கையை ஏற்று சுயமரியாதை திருமணம் செய்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. மணமக்கள் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

From around the web