பெற்றோர்களே உஷார்... சார்ஜ் போட்டிருந்த வெயிட் மிஷினைத் தொட்ட 10 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி பலி!
இப்படியெல்லாம் கூட மரணம் சம்பவிக்குமா என்று அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறார்கள் ராஜாரம்பள்ளி கிராம மக்கள். தெலுங்கானா மாநிலத்தில், சார்ஜ் செய்யப்பட்டுக் கொண்டிருந்த எலக்ட்ரானிக் எடை பார்க்கும் கருவியைத் தொட்ட 10 மாத பெண் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையைக் காப்பாற்ற முயன்ற தந்தைக்கும் மின்சாரம் பாய்ந்தது.
ஜெக்தியல் மாவட்டம், எண்டப்பள்ளி மண்டலத்துக்கு உட்பட்ட ராஜாரம்பள்ளி கிராமத்தில் திருப்பதி - லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 10 மாத பெண் குழந்தை விபூதி ஆத்யா, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது சார்ஜ் செய்வதற்காக மின் இணைப்பில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் எடை பார்க்கும் கருவியை குழந்தை எதிர்பாராதவிதமாகத் தொட்டுள்ளது.
இதனால் குழந்தை மீது மின்சாரம் பாய்ந்தது. இதைக் கவனித்த தந்தை திருப்பதி, குழந்தையைக் காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் மின்சாரம் தாக்கியது. பின்னர் குடும்பத்தினர் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருவியில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
