பெற்றோர்களே உஷார்... காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன் மூச்சு திணறி பலி!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவரின் மகன் முகுந்த் (9)., நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடியக் கொண்டிருந்த நிலையில், கதவுகள் தானாகப் பூட்டிக்கொண்டதால் காருக்குள்ளேயே மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது வீட்டின் முன் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன் என்பவர் வழக்கமாகத் தனது காரை நிறுத்தி வைப்பது உண்டு. நேற்றும் அவர் காரை நிறுத்திவிட்டுச் சென்ற நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுவன் முகுந்த் கார் சாவியை எடுத்துக்கொண்டு காருக்குள் சென்று விளையாடியுள்ளான். அப்போது காரின் கதவுகள் திடீரெனத் தானாகப் பூட்டிக்கொண்டதால் சிறுவனால் வெளியே வர முடியவில்லை. நீண்ட நேரமாக காருக்குள்ளேயே சிக்கியிருந்ததால் மூச்சு திணறி மயக்கமடைந்துள்ளான்.

நேற்று மாலை ஆசிரியர் மணிவண்ணன் காரை எடுக்க வந்தபோது, காருக்குள் சிறுவன் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாகச் சிறுவனை மீட்டுச் சிறுமுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, பின்னர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கார் கதவு திறந்தே இருந்ததா அல்லது சிறுவன் காரின் உள்ளே எப்படிச் சென்றான் என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
