பெற்றோர்களே உஷார்... 4 வயது சிறுமியை விற்பதற்காக கடத்திய பெண்கள்... 6 மணி நேரத்தில் மீட்ட காவல்துறை!
தெலங்கானாவில் கடத்தல் கும்பலுக்கு விற்பனை செய்வதற்காக 4 வயது சிறுமியை இரண்டு பெண்கள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், புகார் கிடைத்த வெறும் 6 மணி நேரத்தில் தனிப்படை போலீசார் சிறுமியைப் பத்திரமாக மீட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் தலமடுகு மண்டலத்தைச் சேர்ந்த ருய்யாடி கிராமத்தில் வசிக்கும் அத்ராம் ஜங்கு - கப்லி பாய் தம்பதியரின் 4 வயது பெண் குழந்தை, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனாள். மாலையாகியும் குழந்தை வீடு திரும்பாததால் பதறிப் போன பெற்றோர், கிராமம் முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரைப் பதிவு செய்த ஆதிலாபாத் மாவட்ட எஸ்பி அகில் மகாஜன், சிறுமியை விரைந்து மீட்க உடனடியாக 3 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் நைதம் நாகு பாய் என்ற பெண், சிறுமியைப் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிலரிடம் ஒப்படைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
போலீசாருக்குக் கிடைத்த தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்திய தனிப்படை போலீசார், நள்ளிரவு நேரத்தில் ஆதிலாபாத் நகரின் மகாலட்சுமிவாடா பகுதியில் சிறுமி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை அடைக்காளம் கண்டனர். அங்கு விரைந்த போலீசார், சிறுமியைப் பத்திரமாக மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட நைதம் நாகு பாய் மற்றும் கும்மடிவார் பாரதி ஆகிய இரண்டு பெண்களையும் கைது செய்தனர்.
மனிதக் கடத்தல் கும்பலிடம் நல்ல விலைக்கு விற்பதற்காகவே சிறுமியைக் கடத்தியதாகக் கைதான பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். புகார் கிடைத்த 6 மணி நேரத்திற்குள் குழந்தையைப் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினரின் இந்த அதிவேக நடவடிக்கையைப் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கண்ணீர் மல்கப் பாராட்டியுள்ளனர்.
