பெற்றோர்களே உஷார்... 'மிக்சர்' சாப்பிட்ட குழந்தை தொண்டையில் வேர்க்கடலை சிக்கி பலி!

 
மிக்சர்

கேரளாவில் காலை உணவிற்குப் பிறகு மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்த 3 வயதுக் குழந்தை, அதிலிருந்த வேர்க்கடலை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம், குன்னும்புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனீர். இவரது 3 வயது மகன் முகம்மது ரிசான். வழக்கம்போல் வீட்டில் காலை உணவை முடித்த பிறகு, குழந்தை முகம்மது ரிசான் விளையாடிக் கொண்டே 'மிக்சர்' சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, மிக்சரில் இருந்த வேர்க்கடலை ஒன்று எதிர்பாராதவிதமாகக் குழந்தையின் மூச்சுக்குழாய் மற்றும் தொண்டைப் பகுதியில் திடீரெனச் சிக்கிக் கொண்டது. இதனால், குழந்தைக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதியுற்றுள்ளது.

குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறுவதைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர், உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குச் செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறல் காரணமாகக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, குழந்தையின் உடல் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. பின்னர், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிறுகுழந்தைகளுக்கு வேர்க்கடலை, முந்திரி, பட்டாணி போன்ற கடினமான தின்பண்டங்களை கொடுக்கும் போது பெற்றோர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.