பெற்றோர்களே உஷார்... பல இளம்பெண்களைக் காதலித்து ஏமாற்றி பணம் பறித்த காதல் மன்னன் கைது!
காதலிப்பதாக பல இளம்பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து கர்ப்பமாக்கி பணம் பறித்த காதல் மன்னனனை கன்னியாகுமரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நெய்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லிஜின் (27). இவருக்கும், சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 23 வயதான பெண் என்ஜினீயர் ஒருவருக்கும் இருவீட்டு பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் கடந்த டிசம்பர் 2ம் தேதி சென்னை வண்ணாரப்பேட்டை எஸ்.பி.கோவில் தெருவில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
முன்னதாக கடலூரை சேர்ந்த இளம்பெண், மணமகன் லிஜின் தன்னை காதலித்து திருமணம் செய்து ஒரு வருடம் தன்னுடன் குடும்பம் நடத்தி விட்டு, ஏமாற்றி விட்டதாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாகவும், மணமகனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் கூறி திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றார்.

ஆனால் லிஜின் அவரை திருமணம் செய்து கொண்டதற்கான எந்தவித ஆவணங்களும் இளம்பெண்ணிடம் இல்லை. இதனால் அவர் பணம் பறிக்க நாடகமாடுவதாக கருதிய இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர். அதன்பிறகு பெண் என்ஜினீயருக்கும், லிஜினுக்கும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்து முடிந்தது.
திருமணம் முடிந்த பிறகு பெண் வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் லிஜின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் ரகசியமாக லிஜின் குறித்து விசாரித்தனர். விசாரணையில் லிஜின் பல பெண்களை காதலித்து ஏமாற்றியதும் இது தொடர்பாக அவர் மீது காவல் நிலையங்களில் புகார் இருப்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் லிஜினின் செல்போனை, அவரது புதுமனைவியான பெண் என்ஜினீயர் ஆய்வு செய்து பார்த்ததில், லிஜினுக்கு இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும், அந்த பெண்களுடன் அவர் பேசிய உரையாடல் இருந்ததையும் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
2019ம் ஆண்டு காரைக்காலை சேர்ந்த பெண்ணை காதலித்து ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணை 6 மாதம் கர்ப்பம் ஆக்கியுள்ளார். இது குறித்து இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண்ணுக்கு ரூ.5 லட்சம் கொடுத்து சமாதானமாக போய் உள்ளார்.

அதேபோல் 2022-ம் ஆண்டு தென்காசியை சேர்ந்த பெண்ணை காதலித்து ஏமாற்றி உள்ளார். இந்நிலையில் 2023-ம் ஆண்டு கடலூரை சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி ஏமாற்றியதும், இதனால் அவர் சென்னை வந்து திருமணத்தை தடுத்து நிறுத்த முயன்றதும் தெரிய வந்துள்ளது. லிஜினின் பெற்றோரைத் தொடர்பு கொண்ட போது அவர்களது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தங்களை நம்ப வைத்து ஏமாற்றி, தங்களது மகளை திருமணம் செய்து கொண்டதாக பெண் என்ஜினீயரின் பெற்றோர், வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சஜிபா வழக்குப்பதிவு செய்து பல பெண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறித்த காதல் மன்னன் லிஜினை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட லிஜின் தாய்-தந்தை மற்றும் உறவினர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போலீசார் கடலூரைச் சேர்ந்த பெண் புகார் தெரிவித்த போதே, லிஜினின் செல்போனை வாங்கி ஆய்வு செய்து பார்த்திருந்தால் இன்னொரு இளம்பெண்ணின் வாழ்க்கை பாழாகி இருக்காது என்று பலரும் கூறி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
