கதறிய பெற்றோர்.. புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

 
புழல் ஏரி மூழ்கி

சென்னை புழல் ஏரியில் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த அகில் ராம் (14) மற்றும் தருண் ஆகாஷ் (14) ஆகிய இருவரும் ஒரே பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூரை அடுத்த முருகாம்பேடு பகுதியில் உள்ள புழல் ஏரிக்கு நேற்று மதியம் குளிக்கச் சென்றுள்ளனர். அங்கு ஏரியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அகில் ராம் மற்றும் தருண் ஆகாஷ் இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.

ஆற்றில் மூழ்கி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர், நீரில் மூழ்கிய மாணவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவு வெகுநேரமாகியும் இருவரைக் கண்டுபிடிக்க முடியாததால் மீட்புக் குழுவினர் தற்காலிகமாகத் திரும்பினர். இருப்பினும், சிறுவர்களின் பெற்றோர் ஏரிக்கரையிலேயே நின்று கதறி அழுத காட்சி காண்போரைக் கண் கலங்கச் செய்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை இரண்டாவது நாளாகத் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. மெரினா சிறப்பு மீட்புக் குழுவினரும் வரவழைக்கப்பட்டு, நீச்சல் வீரர்கள், உள்ளூர் மீனவர்கள் மற்றும் தெர்மல் இமேஜிங் கேமரா உள்ளிட்ட அதிநவீன உபகரணங்களைக் கொண்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மூழ்கி பலி

இந்தத் தீவிர தேடுதலின் முடிவில், மாயமான இரண்டு மாணவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதில் அகில் ராமின் உடல் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு மாணவரான தருண் ஆகாஷின் உடலை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரே பள்ளியில் படித்து வந்த இளம் நண்பர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.