ஆம்புலன்ஸ் இல்லாததால் மகனை ஸ்டிரெச்சரில் இழுத்துச் சென்ற பெற்றோர்!
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில், முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக 12 வயது சிறுவன் ஆதர்ஷ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அவனுக்கு முதலுதவி அளித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு பெற்றோரிடம் அறிவுறுத்தியுள்ளனர்.
தங்கள் மகனை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் கோரி அந்தப் பெற்றோர் நீண்ட நேரம் தேடியும், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்த வாகனமும் ஏற்பாடு செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி, அந்தப் பெற்றோர் தங்களது மகனை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு வெளியே உள்ள சாலையில் தள்ளிக் கொண்டே செல்லத் தொடங்கினர்.
கடும் வெயிலில் தந்தை ஸ்டிரெச்சரைச் சாலையில் இழுக்க, தாய் தனது சேலையைத் தண்ணீரில் நனைத்து மகனின் முகத்தில் போர்த்தியபடி நடந்து சென்ற உருக்கமான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றும் அங்கிருந்து மீண்டும் பழைய மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஒய். மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
