பள்ளிச் சிறுமியைத் தாக்கிய ஆசிரியர் மீது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார்!
சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், பயிலும் சிறுமியைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் உடல் ரீதியாகத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பள்ளிச் சிறுமியின் பெற்றோர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் சிறுமியை, அங்குப் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் வைத்துப் பின்புறமாகக் கையால் பலமாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுமி, தனக்கு நேர்ந்த இந்தத் துயரச் சம்பவத்தைக் அழுது கொண்டே பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாகப் பள்ளி நிர்வாகத்தை நாடியுள்ளனர்.
ஆசிரியரின் இந்த வன்முறைச் செயல் குறித்து விளக்கம் கேட்பதற்காகச் சிறுமியின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று அங்கிருந்த தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேரில் சந்தித்துள்ளனர். "எங்கள் குழந்தையை ஆசிரியர் அடித்தது குறித்துத் தலைமை ஆசிரியரிடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் நியாயம் கேட்டோம். ஆனால், அவர்கள் இருவருமே அதற்குரிய முறையான பதிலை அளிக்காமல், பொறுப்பற்ற முறையிலும் அலட்சியமாகவும் எங்களை நடத்தினார்கள்," எனச் சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளி நிர்வாகத் தரப்பில் உரியப் பதில் கிடைக்காததால், மனமுடைந்த பெற்றோர் உடனடியாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது சட்டப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பள்ளிச் சிறுமியைக் காயப்படுத்திய குற்றத்திற்காகப் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தவும், அங்குள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். பள்ளி வளாகத்திற்குள்ளேயே சிறுமிக்கு நேர்ந்த இந்தத் தாக்குதல் சம்பவம் வளசரவாக்கம் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
