காதலுக்குப் பெற்றோர் எதிர்ப்பு.. செல்போன் டவர் மீது ஏறி இளம்பெண் தற்கொலை மிரட்டல்!

 
செல்போன் டவர் காதல் இளம்பெண்

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், காதலித்த இளைஞரைத் திருமணம் செய்து வைக்கப் பெற்றோர் மறுத்ததால் விரக்தியடைந்த இளம்பெண் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சாதி மறுப்புத் திருமணம் என்பதால் இரு வீட்டாரும் இதற்குச் சம்மதிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

செல்போன் டவர்

காதலைப் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் கடும் மன உளைச்சலுக்கும் விரக்திக்கும் ஆளான அந்த இளம்பெண், இன்று அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். நேராக அந்தப் பகுதியில் உள்ள உயரமான செல்போன் டவர் மீது ஏறிய அவர், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

அதிகாலையில் இளம்பெண் டவர் மீது ஏறி நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகக் காவல் நிலையத்திற்கும், அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், குடும்பத்தினரும் டவரின் கீழே நின்று கொண்டு அந்தப் பெண்ணிடம் நீண்ட நேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

செல்போன் டவர்

காவல்துறையினரும் பெற்றோரும் அவர் விரும்பும் விதத்தில் உரிய பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படுவதாக உறுதியளித்ததைக் தொடர்ந்து, மனம் மாறிய அந்த இளம்பெண் பாதுகாப்பாகக் கீழே இறங்கினார். இதனைத் தொடர்ந்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.