காருக்குள் சிக்கிய 1 வயது குழந்தை - கண்ணாடியை உடைத்து மீட்ட பெற்றோர்!

 
கார் கண்ணாடி குழந்தை சிக்கிய காருக்குள்

நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், அன்சாரி என்பவர் பணம் செலுத்திக் கொண்டிருந்த போது அவரது சொகுசு கார் திடீரென உள்பக்கமாகத் தானாகப் பூட்டிக் கொண்டது. காருக்குள் ஒரு வயது குழந்தை சிக்கியதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சாவியால் காரைத் திறக்க முயன்றும் அது பலனளிக்கவில்லை.

இறுதியாக ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அன்சாரி என்பவர் தனது சொகுசு காரில் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுவிட்டு, வழியில் எரிபொருள் நிரப்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஒரு பெட்ரோல் பங்க்கிற்கு வந்துள்ளார். கார் நின்றவுடன் எரிபொருளுக்கான தொகையைச் செலுத்துவதற்காக அன்சாரி காரைவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

அன்சாரி பணம் செலுத்திக் கொண்டிருந்த அந்த எதிர்பாராத கணத்தில், அவரது அதிநவீன சொகுசு கார் திடீரென உள்பக்கமாகத் தானாகவே லாக் ஆகியுள்ளது. நவீன கார்களில் உள்ள ஆட்டோமேட்டிக் லாக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கார் பூட்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காரின் கதவுகள் அனைத்தும் தானாக மூடிக் கொண்டதோடு, காருக்குள்ளேயே ஒரு வயது நிரம்பிய பச்சிளம் குழந்தை ஒன்று தனியாக மாட்டித் தவித்துள்ளது. காரின் வெளிப்பக்கம் கதவைத் திறக்க முயன்ற பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

காருக்குள்ளேயே குழந்தை அழுது துடிப்பதைக் கண்டு பதறிப்போன பெற்றோர், தங்களது காரின் மாற்றுச் சாவிகள் மற்றும் ரிமோட் சாதனங்களைப் பயன்படுத்தி கதவைத் திறக்கத் தீவிரமாக முயன்றுள்ளனர். இருப்பினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சாவிகள் வேலை செய்யவில்லை, இதனால் பெற்றோரின் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

ஒரு மணி நேரப் போராட்டம்: காருக்குள் இருக்கும் குழந்தையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சுற்றியிருந்த பொதுமக்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களும் இணைந்து காரின் கதவைத் திறக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடியும் கதவைத் திறக்க முடியாத இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

நிலைமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்கவும், மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றவும் இறுதியில் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி பலத்த போராட்டத்திற்குப் பிறகு ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டு, உள்ளே சிக்கியிருந்த ஒரு வயது குழந்தை எந்தவித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்ந்த இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து, சிறிது நேரம் பரபரப்பான சூழலும் நிலவியது. இருப்பினும், குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.