சிறுவர்கள் வண்டி ஓட்டினால் பெற்றோர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை, ரூ25,000 அபராதம்!
புதுச்சேரியில் உரிமம் இல்லாத சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தடுக்க காவல் துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 20 முதல் 24 வரை நடத்தப்பட்ட சோதனையில் 30 பேர் சிக்கியுள்ள நிலையில் இது தொடர்பாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுவர்கள் வாகனம் ஓட்டும்போது விபத்துகள் ஏற்படுவதுடன் சாலைகளில் செல்லும் மற்ற பயணிகளின் உயிருக்கும் பெரும் அச்சுறுத்தல் உண்டாவதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

18 வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதுடன் வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தகுதி இழப்பார்கள். வாகனம் ஓட்டும் சிறுவர்கள் குழந்தைகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறுபவர்கள் யாராக இருந்தாலும் தயவு காட்டாமல் நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குறைந்த வயதுடைய சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது வாகன உரிமையாளர்களுக்கு 25,000 ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் மற்றும் வீடுகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் எந்த சூழலிலும் சிறுவர்களிடம் வாகனங்களை வழங்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
