பார்த்தசாரதி கோயில் தேர் மின்சாரக் கம்பி தட்டி குடை சரிந்ததால் பரபரப்பு!

 
பார்த்தசாரதி

சென்னை மாநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி மாத பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் கலந்துகொண்டு வடம்பிடித்துத் தேரை இழுத்தனர்.

மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேர், அங்குள்ள டி.பி.கோயில் தெரு வழியாக மெதுவாக நகர்ந்து வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையின் குறுக்கே மேலே சென்ற மின்சாரக் கம்பி ஒன்று பெரிய தேரின் குடையில் பலமாகத் தட்டியுள்ளது. கம்பி தட்டிய வேகத்தில் தேரின் உச்சிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த குடை திடீரென ஒருபக்கமாகச் சரிந்ததால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கத் தேரோட்டம் உடனடியாகச் சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கோயிலின் தலைமை அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உடனடியாகத் தேரின் மீது ஏறிச் சரிந்த குடையைச் சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். குடை வெற்றிகரமாகச் சரிசெய்யப்பட்ட பின்னர், சிறிது நேரத் தடைக்குப் பிறகு திருத்தேரோட்டம் மீண்டும் தொடங்கி மாட வீதிகளில் வலம் வந்து நிலையை வந்தடைந்தது.