பேருந்தில் பயணிக்கு திடீரென வலிப்பு.. அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று உயிரைக் காப்பாற்றிய ஓட்டுநர்!
சென்னை புறநகர்ப் பகுதியில் அரசுப் பேருந்து ஓட்டுநரின் மிகச் சரியான நேரத்துச் சாதுரியமான செயலால் ஒரு பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.
சென்னை பல்லாவரம் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரென கடுமையான வலிப்பு ஏற்பட்ட சூழலில், பேருந்தை மாற்றுப் பாதையில் மருத்துவமனைக்கு விரைந்து ஓட்டிச் சென்று அவரது உயிரைக் காத்துள்ளார் ஓட்டுநர் லட்சுமணன்.
இன்று மதியம் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலைப் பகுதியில் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்த போது இந்த அவசரநிலை ஏற்பட்டுள்ளது. பேருந்தில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவருக்குத் திடீரென உடல்நடுங்கி, வாயில் நுரை தள்ளி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்துக்குள் இருந்த சக பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் பதற்றமடைந்தனர்.
பேருந்தில் பயணி ஒருவருக்கு உயிருக்குப் போராடும் நிலை இருப்பதை உணர்ந்த ஓட்டுநர் லட்சுமணன், பேருந்தை வழக்கமான நிறுத்தங்களில் நிறுத்தாமல், உடனடியாகத் தாம்பரம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையை நோக்கி அதிவேகமாகச் செலுத்தினார்.
பேருந்து மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும், நடத்துநர் கீதர் இளையராஜா மற்றும் பேருந்தில் இருந்த சக பயணிகள் அனைவரும் ஒன்றிணைந்து, அந்தப் பெண்ணை உடனடியாகத் தூக்கிக்கொண்டு அவசரச் சிகிச்சைப் பிரிவிற்கு ஓடினர்.
அங்குத் தயாராக இருந்த மருத்துவர்கள் குழு, அந்தப் பெண்ணிற்குத் தாமதமின்றி அவசர ஊசிகளைச் செலுத்தித் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் இந்த உடனடி மற்றும் துரித சிகிச்சையின் காரணமாக, சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அந்தப் பெண் முழுமையாகக் குணமடைந்து, தற்பொழுது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார். 'சரியான கோல்டன் ஹவர்' எனப்படும் அந்த இக்கட்டான நேரத்தில், ஓட்டுநர் லட்சுமணன் எடுத்த சாதுரியமான முடிவே அந்தப் பெண்ணின் உயிர் பிழைக்கக் காரணம் என மருத்துவர்கள் பாராட்டியுள்ளனர்.
பொதுமக்களின் உயிருக்கு மதிப்பளித்து, நெரிசல் மிகுந்த சாலையில் பேருந்தைச் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் நடத்துநர் கீதர் இளையராஜா ஆகியோரின் மனிதநேயமிக்க செயலைத் தவெக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் நேரில் அழைத்து வெகுவாகப் பாராட்டியுள்ளார். மேலும், இவர்களின் இந்தச் சேவையைப் பாராட்டி அரசுத் தரப்பில் உரிய உயரிய விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
