நடுக்கடலில் பயணிகள் கப்பல் மூழ்கி 27 பேர் பரிதாபப் பலி... பெரும் சோகம்!

 
கடல்

தென்அமெரிக்க நாடான கயானாவில் 179 பயணிகளுடன் பயணித்த எம்.வி. பாரிமா என்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் திடீரெனக் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து போர்ட் கைடூமா பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது கரைப்பகுதியில் இருந்து சுமார் 7 மைல் தொலைவில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கப்பலில் இருந்து நள்ளிரவில் ஆபத்து சமிக்ஞை வந்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருப்பினும் சீற்றத்துடன் காணப்பட்ட கடல் அலைகள் மற்றும் இருள் காரணமாகத் தொடக்கக் கட்டத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவால்கள் நிலவின.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை 27 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய 69 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 83க்கும் மேற்பட்ட பயணிகள் மாயமாகி இருப்பதாக  அஞ்சப்படுகிறது. மாயமானவர்களைத் தேடும் பணிகளில் தனியார் ஆற்றல் துறை படகுகள், நவீன ஸ்கேனர்கள் மற்றும் அனுபவமிக்க மூழ்காளர்கள் தீவிரமாக இறக்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட பலரின் பெயர்கள் கப்பலின் அதிகாரப்பூர்வப் பயணப் பட்டியலில் இடம்பெறாததால், பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது.

Ferry carrying 116 people capsizes off Guyana coast - The Times of India

இந்தக் கொடூர விபத்து குறித்துக் கயானா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கப்பலின் மாலுமிகள் போதைப் பொருள் பயன்படுத்தியதே இந்த கோர விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலின் கேப்டன் உட்பட ஊழியர்களிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழியர்களின் அலட்சியமே பலரின் உயிரைப் பறித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து கயானா நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.