ஊட்டி மலை ரயிலின் 118-வது தினம் - கேக் வெட்டி பயணிகள் உற்சாகக் கொண்டாட்டம்!

 
ஊட்டி மலை ரயில்

உலகப் புகழ்பெற்ற நீலகிரி மலை ரயிலின் 118-வது தினம் ஊட்டி ரயில் நிலையத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கடந்த 1899-ஆம் ஆண்டு ஜூன் 15 முதல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே முதன்முதலில் மலை ரயில் சேவை இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 1909-ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் ஊட்டி ரயில் நிலையம் வரை இ சேவை வெற்றிகரமாக நீட்டிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளே ஆண்டுதோறும் நீலகிரி மலை ரயில் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மலை ரயில் ரத அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், ஊட்டி ரயில் நிலையத்திற்கு வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளை அறக்கட்டளையின் தலைவர் நடராஜ் மற்றும் ரயில்வே அலுவலர்கள் பூங்கொத்து கொடுத்து அன்புடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவின் ஒரு பகுதியாக, ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரம்பரிய மலை ரயிலின் வரலாற்று அருங்காட்சியகத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். 

விழாவில் பங்கேற்ற ரயில்வே அதிகாரிகள், நீலகிரி மலை ரயிலின் பாரம்பரியச் சிறப்புகள் மற்றும் அதன் இயக்க நுட்பங்கள் குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு விரிவாக விளக்கினர்.