3 வயது குழந்தையின் கண் முன்னே பெற்றோர் பலி! படாளம் அருகே லாரி மோதி தம்பதி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே லாரி மோதிய விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன் பைக்கில் சென்ற 3 வயது குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா முனுங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (41). இவரது மனைவி கவிதா என்ற பச்சையம்மாள் (38). இவர்கள் இருவரும் தங்களது 3 வயது ஆண் குழந்தையுடன் இன்று (நவம்பர் 11) காலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அடுத்த மெய்யூர் சந்திப்பு பகுதியில் சென்றபோது, பின்னால் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேலு, பச்சையம்மாள் இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் தூக்கி வீசப்பட்ட குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த படாளம் போலீசார், தம்பதியின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
