அரசு மருத்துவமனையில் மின் தடை - செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை!
பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மின் விளக்கு மற்றும் ஜெனரேட்டர் வசதியின்றி செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ரோஸ்தாஸ் மாவட்டம் சசராம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், நேற்று மாலை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது திடீரென மின் தடை ஏற்பட்டது. அவசர காலத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஜெனரேட்டரும் உடனடியாக இயங்காததால், மருத்துவமனை வளாகம் முழுவதும் இருளில் மூழ்கியது.
தீவிரச் சிகிச்சையில் இருந்த நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வேறு வழியின்றித் தங்களது செல்போன் டாார்ச் வெளிச்சத்திலேயே மருத்துவர்கள் அவர்களுக்குச் சிகிச்சை அளித்தனர். மருத்துவமனை மேலாண்மையின் இந்த அலட்சியப் போக்கு குறித்த காணொளிகளும் செய்திகளும் வெளியாகிப் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மருத்துவத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
