பெண் ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்? தவெக எம்எல்ஏவை கைது செய்ங்க... பெ. சண்முகம் ஆவேசம்!

 
சண்முகம்

 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள தவெக எம்எல்ஏ மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டு அறைகூவல் ஆவண வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? மது போதையா? அருள் விக்னேஷ் விளக்கம் | TVK MLA Arul Vignesh Responds to Allegations

அரசுப் பொறுப்பில் இருக்கும் பெண் அதிகாரிக்கே இதுபோன்ற தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், தமிழகத்தின் மாநில உரிமைகள் மற்றும் மத்திய – மாநில உறவுகள் தொடர்பாக ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவைக் கலைத்தது தவறான முடிவு என்றும் விமர்சித்தார்.

அந்தக் குழு ஏற்கெனவே முதல்கட்ட அறிக்கையை அளித்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து செயல்பட அனுமதிக்காமல் கலைத்தது ஏற்புடையதல்ல என்றும் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.பெ. சண்முகத்தின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.